பம்பை நதிக்கரையில் புலியின் மீது அமர்ந்த 28 அடி உயர ஐயப்பன் சிலை திறப்பு; பக்தர்கள் பரவசம்
கூடலுார்: சபரிமலை அருகே பம்பை நதிக்கரையில் புலியின் மீது அமர்ந்த ஐயப்பன் சிலை இன்று ஆவணி முதல் நாள் தரிசனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர பூஜை, சித்திரை விசு காலங்களில் கூடுதல் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இது தவிர அனைத்து தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பம்பையில் கணபதி கோயில் உள்ளது. அங்கிருந்து 7 கி.மீ., தூரம் மலை ஏறி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி செல்வார்கள். பம்பை நதிக்கரையோரம் சுவாமி ஐயப்பன் புலியின் மீது அமர்ந்தவாறு உள்ள சிலை கடந்த மூன்று ஆண்டுகளாக அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் இன்று ஆவணி முதல் நாளில் பக்தர்களின் தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் துவக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 28 அடி உயரத்தில் கம்பீரமாக பக்தர்களின் கவலையை போக்கும் சுவாமி ஐயப்பனின் சிலை முதன்முதலாக பம்பை நதிக்கரையில் திறக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.