உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி முருகன் கோவிலில் அக்., 1 முதல் மொபைல், கேமராவுக்கு தடை

பழனி முருகன் கோவிலில் அக்., 1 முதல் மொபைல், கேமராவுக்கு தடை

சென்னை, பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குள் மொபைல் போன்கள், கேமரா பொருத்தப்பட்ட கருவிகள் கொண்டு வர விதிக்கப்பட்ட தடை, அக்., 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலைய துறை தெரிவித்துள்ளது. பழனி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து, கோவில் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த சிறப்பு அமர்வு, பழனி கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்பது தொடர்பான ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. நேற்று சிறப்பு அமர்வு முன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனி கோவில் சார்பில் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆஜராகி, இணை ஆணையரின் ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் விபரம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை, ௨௦௨௨ டிச., 2ல் பிறப்பித்த உத்தரவின்படி, பழனி கோவிலுக்குள் மொபைல்போன்கள், கேமரா பொருத்தப்பட்ட கருவிகள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை, அக்.,1 முதல் அமலுக்கு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்துார் சுப்ரமணிய சாமி கோவிலில், சுய உதவி குழுக்கள் வாயிலாக, மொபைல் போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோல பழனியில், ’விஞ்ச், ரோப்’ கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே என, மூன்று இடங்களில் மொபைல் போன் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும். மலை கோவில் அருகே அமைந்துள்ள தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து, அது மீட்டு எடுக்கப்பட்டால், அதில் ஒரு பகுதி, மொபைல் போன் சேகரிப்பு மையமாக பயன்படுத்தப்படும். கோவிலுக்குள் மொபைல் போன்கள் எடுத்துச் செல்லக்கூடாது என, ரயில், பஸ் நிலையங்கள், பக்தர்கள் தங்கும் இடங்களில் விளம்பரப்படுத்தப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதிக்கப்படுவர். இந்த சோதனையையும் மீறி, பக்தர்கள் எவரேனும் கேமரா போன்ற பொருட்களை கொண்டு வந்து, கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், அவர்களை கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்று, இந்த நடைமுறைகளை அனைத்து கோவில்களிலும் பின்பற்றும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !