சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் மழைக்கால ஈசலை போல் அடித்துச் செல்லப்படுவர்; மன்னார்குடி ஜீயர்
திருச்சி: ‘‘சனாதன தர்மத்தை பற்றி பேசுபவர்கள், மழைக்கால ஈசலை போல அடித்துச் செல்லப்படுவர்,’’ என, மன்னார்குடி, செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்தார். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு நேற்று வந்த அவர் கூறியதாவது: அமைச்சர் பொறுப்பில் இருப்பவர், சனாதனத்துக்கும், சனாதன தர்மத்துக்கும் விரோ தமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஜாதி, மத வேறுபாடு இன்றி செயல்பட வேண்டிய அமைச்சர், ஒரு தர்மத்துக்கு விரோதமாக பேசுகிறார். அந்த அமைச்சரும், அரசும் நமக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. கிறிஸ்தவர், இஸ்லாமிய மதத்தினரிடம், அந்த மதங்களில் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி, சரி செய்யுங்கள் என்று கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா? சனாதன தர்மத்தை பற்றி பேசுபவர்கள், மழைக்காலத்தில் பறக்கும் ஈசலை போன்றவர்கள். இறக்கை உதிர்ந்ததும் கீழே விழும் ஈசலை, எறும்புகள் எடுத்துச் செல்வது போல , அந்த கும்பலும் அடித்துச் செல்லப்படுவது உறுதி. நாட்டின், 125 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள் தான். சிறுபான்மை மக்களை தவிர்த்து, 91 சதவீதம் உள்ள ஹிந்துக்களை விரோதித்து பேசுபவர்கள், இந்த நாட்டில் இருக்க் கூடாது; இருக்க விடக்கூடாது. தர்மத்துக்காக பாடுபட்டவர்கள் சிலர்; தர்மத்தின் பெயரை சொல்லி சம்பாதித்தவர்கள் சிலர். இவர்கள் தர்மத்தின் பெயரை சொல்லி சம்பாதிக்கின்றனர். அரசும், நிர்வாகத்தில் இருப்பவர்களும், ஜாதி, மதம் பற்றி பேசக் கூடாது. லோக்சபா தேர்தல் வரப்போவதால், ஓட்டுக்காக, ஜாதி, மத பிரச்னைகளை துாண்டி விடுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.