திருச்செந்துாரில் ஆவணித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான குடவருவாயில் தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா கடந்த4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 5ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். அதே நேரத்தில் பந்தல் மண்டபம் முகப்பு கீழரத வீதியில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருள எதிர் சேவையாக இருபுறமும் தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (10ம் தேதி) 7ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது.