உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா; 2வது முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா; 2வது முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ப.வேலுார்; வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினரிடையே இரண்டாவது முறையாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கரையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வெங்கரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சம்பந்தப்பட்ட ஒருதரப்பினர், ‘வழிபாட்டு நிகழ்ச்சி, திருவிழாவின் போது, சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என, திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். இதுதொடர்பாக, அமைதி பேச்சுவார்த்தை கடந்த, 1ல், ப.வேலுார் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. அதில், சுமுக  தீர்வு ஏற்படாததால், பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்தனர். மீண்டும், இரண்டாவது முறையாக, நேற்று முன்தினம், தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ப.வேலுார் இன்ஸ்பெக்டர் இந்திராணி, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், இதுகுறித்து அறிக்கையை, திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தியிடம் சமர்ப்பித்தனர். இதனால், திருவிழா நடக்கும் என, காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !