ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம்; அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு
மேலுார்: வெள்ளலூரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனாக அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகள் தேர்வு நடைபெற்றது.
ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா வெள்ளலூர், உறங்கான்பட்டி, உள்ளிட்ட 60 கிராமத்தினர் கொண்டாடும் வெள்ளலூர் நாட்டின் திருவிழாவாகும். விழாவின் முக்கிய நிகழ்வான ஏழு சிறுமிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி வெள்ளலுார் குடியிருப்பு கோயில் முன் இன்று நடைபெற்றது. பூசாரி சின்னதம்பி 7 பிரிவுகளை சேர்ந்த சிறுமிகளை தேர்வு செய்து கோயில் வீட்டிற்குள் அழைத்து சென்றார். தேர்வு செய்யப்பட்ட சிறுமிகள் 7 பேரும் 15 நாட்கள் கோயில் வீட்டில் தங்கி இருப்பார்கள். இந் நாட்களில் பொதுமக்கள் எண்ணெய் தாளிதம், மாமிசம் சாப்பிடாமலும், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடும் விரதம் இருப்பார்கள். செப் 17ல் முளை பிடுங்கி ஆடுதல்(பானையில் இருக்கும் நெல்லை எடுப்பது), செப்.24 ல் அம்பலச்சோறு நிகழ்ச்சியும், 15 நாள் முடிவான செப் 26ல் சிறுமிகள் முன்னே நடந்து செல்ல அம்பலகாரர்கள் தலைமையில் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கோயில் பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வார்கள். அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள், உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டியவர்கள் பதுமைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து செப்.27 ல் தேரோட்டம், செப்.28 ல் மஞ்சள் நீராட்டும், அக். 3 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா தோன்றிய வரலாறு: வெள்ளலூர் நாட்டை சேர்ந்த அக்கா, தங்கை இருவரில் தங்கைக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளை தன்குழந்தைகளாக பாவித்து அக்கா வளர்க்க ஆரம்பித்தார். இதனால் தன் குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விடுமோ என்று பயந்து அக்கா தேடிவந்த போது குழந்தைகளை கூடைக்குள் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றதாக தங்கை பொய் சொன்னார். அக்கா சென்ற பிறகு கூடையை திறந்து பார்த்த போது ஏழு குழந்தைகளும் கல்லாக மாறியிருந்தனர். பின்னர் ஏழை காத்தம்மனை வேண்டியதால் குழந்தைகள் உயிர் பெற்றதாக ஐதீகம். இந் நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக இத்திருவிழா நடக்கிறது.