சுவாமி தரிசனம் செய்ய.. கிருஷ்ணா நதிக்கரையில் பக்தர்கள் கட்டிய மிதவை பாலம்
பாகல்கோட்: சாமி தரிசனம் செய்வதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்கள் பாலம் கட்டி உள்ளனர். ஜமகண்டி தாலுகா கங்கன்வாடியில் கிருஷ்ணா நதிக்கரையில் குகேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திங்கட்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இதற்காக பக்தர்கள் திரளாக வருவது வழக்கம். கிருஷ்ணா நதியில் தண்ணீர் அதிகம் வரும் போது எதிர்கரையில் இருந்து பக்தர்கள் வருவது சிரமமாக உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதனை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை . எனவே , மக்களும், பக்தர்களும் கைகோர்த்து புதிய பாலத்தை தற்போது கட்டி முடித்துள்ளனர். 25 லட்சம் ரூபாய் செலவில் 800 அடி நீளம், 8 அடி அகலத்தில் ‘மிதவை பாலம்’ தயாராகி உள்ளது. 300 பிளாஸ்டிக் பேரல்கள், 10 டன் மரம், 20 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டுள்ளது.