சாயல்குடி வீரமாகாளியம்மன் கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா
சாயல்குடி: சாயல்குடி வீரசைவ ஆண்டி பண்டாரத்தார் நிர்வாகத்திற்குட்பட்ட வீரமாகாளி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத 30ஆம் ஆண்டு பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. கடந்த செப்.,29 அன்று கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன் தினம் மாலை 6:00 மணியளவில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. மூலவர் வீரமாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் பக்தர்கள் சாயல்குடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தனர். பாலபிஷேகம் செய்யப்பட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பூத்தட்டு ஏந்தி ஏராளமான பெண்கள் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனின் ரதம் வந்தது. இன்று காலை 7:00 மணியளவில் கூட்டுப் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை சாயல்குடி வீர சைவ ஆண்டி பண்டாரத்தார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.