திருப்பதி பிரம்மோற்சவம்: கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் வலம்வந்தார்.
திருமலை ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவம், விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் சுவாமி தேவியருடன் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கற்பக விருட்ச வாகனத்தில் வரும் சுவாமியை தரிசித்தால் கேட்டது யாவும்
கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை
சர்வபூபால வாகனத்தில் சுவாமி உலா வருவார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பஸ் நிலையத்திலிருந்து துவங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகர் சோதனை சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. செல்லும் பாதையில் மலர் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.