உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம்

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் கார்த்திக்கை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் நவ., 27ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி செம்பை சங்கீத உற்சவம் இன்று தொடங்குகிறது. கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் உற்சவத்தை தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் இந்தாண்டு செம்பை நினைவு விருது பிரபல இசை கலைஞர் மதுரை சேஷகோபாலுக்கு அமைச்சர் வழங்குகிறார். தொடர்ந்து மதுரை சேஷகோபாலின் சங்கீத கச்சேரி அரங்கேறும். 15 நாள் உற்சவத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று மாலை 5.30 மணிக்கு பாலக்காடு செம்பையில், செம்பை வைத்தியநாத பாகவதரின் தம்புராவுடன் வாகன ஊர்வலம் குருவாயூர் புறப்பட்டது. செம்பை வித்யா பீட தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்தூர் முருகனிடமிருந்து, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயனின் தலைமையிலான சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர். தம்புராவை இன்று சங்கீத உற்சவ மேடையில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !