திருத்தணி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா வரும் 14ல் துவக்கம்; சூரசம்ஹாரம் இல்லை.. புஷ்பாஞ்சலி நடைபெறும்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் வரும், 14ல் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. வரும் 14ல் தேதி தங்க கவசம், 15ல் திருவாபரணம், 16ல் வெள்ளி கவசம், 17ல் சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 18ல் மாலையில் புஷ்பாஞ்சலியும், 19ம் தேதி நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது. மற்ற ஆறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி நாளில் சூரசம்ஹாரம் நடை பெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
சூரசம்ஹாரம் இல்லை: முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.