கொட்டும் மழையில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் ஜென்ம தினத்தை ஒட்டி, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன், ஐப்பசி பூரம் பால்குட விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், மாலை 3:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4:20 மணியளவில், சங்கரமடத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்பட்ட ஒரு சில நிமிடத்தில் காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் நுாற்றுக்கணக்கான பெண்கள், பால்குடத்தை ஏந்தியபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவில் சென்றனர். அங்கு அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், உதவி ஆணையர் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், காமாட்சி அம்பாள் தேவஸ்தான சிப்பந்திகள், ஐப்பசி பூரம் விழா குழுவினர் செய்திருந்தனர்.