ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவிலில் சித்தராமையா, குமாரசாமி சபதம்
ஹாசன் : ஒரே நாளில் ஹாசனாம்பா தேவியை தரிசித்த முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி சபதம் எடுத்துள்ளனர்.
ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்தாண்டு, கடந்த 2ம் தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகிய இருவரும் நேற்று ஒரே நாளில் தனித்தனியே ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்தனர்.
பின், சித்தராமையா கூறியதாவது: மூட நம்பிக்கை இன்று, நேற்று தோன்றியது அல்ல. மூட நம்பிக்கை என்பது நம்பிக்கையில், அவ நம்பிக்கை ஏற்படுத்துவது ஆகும். கடந்த காலத்தில் இருந்து மூட நம்பிக்கை கடைபிடித்து வருகின்றோம். அவற்றை நான் நம்பவில்லை. ஆனால், கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லது நடக்கட்டும் என்றும், ஏழை, எளியோர், விவசாயிகள், ஒடுக்கப்பட்டோருக்கு சேவை புரிய நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்படியும், ஹாசனாம்பா தேவியிடம் வேண்டிக் கொண்டேன். ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வேறு கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களும், ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் டிசம்பரில் நடக்க உள்ள குளிர்கால கூட்டத்தொடருக்கு பின், 31 மாவட்டங்களில் விவசாய ஆறுதல் யாத்திரை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.