உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

பழநி: பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் உடன் துவங்கியது.

பழநி முருகன் கோயிலில் இன்று (நவ.13 ல்) கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. காலையில் கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயில் வந்தது. மதியம் 12:00 மணிக்கு மலைக்கோயிலில் உச்சி காலபூஜை நடை பெற்றது.அதில் விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தேய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டினர். திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். மாலையில் சண்முகர் தீபாராதனை நடைபெறும். விழா நாட்களில் தினமும் சுவாமி புறப்பாடு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.18,ல் மாலை கிரிவீதியில் நடைபெறும். அன்று மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று, மதியம் 2:45 மணிக்கு மேல் சின்னகுமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் மலைக்கோவிலில் சன்னதி அடைக்கப்படும். சின்னகுமாரசுவாமி அடிவாரம் மண்டபத்தில் எழுந்தருள்வார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனை, முத்துக்குமார சுவாமி, மயில்வாகனத்தில் அடிவாரம், மண்டபத்தில் எழுந்தருள்வார். அன்று மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளில் சூரன் வதம் நடைபெறும். அதன் பின் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். அன்று இரவு 9:00 மணிக்கு மேல் சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அன்று மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. ஏழாம் நாளான நவ‌.19,ல் மலைக் கோயிலில் காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா, சண்முகருக்கு திருக்கல்யாணம், மாலை 6:30 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் வள்ளி,தேவசேனா, முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !