மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். இரவு 10.30மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் தாலாட்டு நடத்தினர். ஊஞ்சல் உற்சவம் துவங்குவதற்கு முன்பிருந்தே லேசான தூரல் இருந்தது. உற்சவம் நடந்த போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நனைந்தபடி அம்மன் பாடல்களை பாடியபடி சாமி தரிசனம் செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்: இந்த மாதம் அமாவாசை 12ம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்கி 13ம் தேதி மதியம் 3 மணியளவில் முடிவடைந்தது. இதனால் பக்தர்கள் இரண்டு நாட்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களுக்காக முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர். இதனால் மேல்மலையனூருக்கு அமாவாசையன்று மிக குறைந்த அளவில் சிறப்பு பஸ்களை இயக்கினர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் மழை கொட்டியது. பக்தர்கள் ஒதுங்கவும் இடமின்றி மழையில் நனைந்தனர். அப்போது சொந்த ஊர் திரும்ப பஸ்கள் இல்லை. இதனால் ஆத்திரமான பக்தர்கள் செஞ்சி செல்லும் சாலையில் வேன், கார்களை மறித்து சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த வளத்தி போலீசார் பக்தர்களை சமாதானம் செய்து போக்கு வரத்தை சரி செய்தனர்.