உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் குவியும் பக்தர்கள்; நாளை சூரசம்ஹாரம்.. ஆணவத்தை அழித்து சூரனை ஆட்கொள்கிறார் சுப்பிரமணியர்

திருச்செந்துாரில் குவியும் பக்தர்கள்; நாளை சூரசம்ஹாரம்.. ஆணவத்தை அழித்து சூரனை ஆட்கொள்கிறார் சுப்பிரமணியர்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (18ம் தேதி) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. கந்த சஷ்டி நான்காம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. பின்பு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். சண்முக விலாசத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி தங்க தேரில், வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


நாளை சூரசம்ஹாரம்; கந்த சஷ்டி ஐந்தாம் நாளான இன்று கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான, ஆணவத்தை அழித்து சூரனை ஆட்கொள்ளும் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (18ம் தேதி) நடக்கிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது, மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள், தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 5 மணிக்கு சுவாமியும், தெய்வானை அம்பாளும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !