சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீஸ் பாதுகாப்பு
சபரிமலை: தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஏந்தி வந்து தரிசனம் நடத்துகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் முன் பதிவு சரிபார்த்த பின்னர் பக்தர்கள் தொடர்ந்து நீலி மலை,அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்கின்றனர்.
பம்பையில் இருந்து சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் 1400 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு முறையில் கடந்த இரண்டு நாட்களில் 37 ஆயிரத்து 348 பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முழுக்க முழுக்க இலவசம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சகாஸ் மற்றும் சென்னை சிம்ஸ் மருத்துவமனை இணைந்து சன்னிதானத்தில் அவசர சிகிச்சை மையம் , ஆம்புலன்ஸ், உள்ளிட்ட வசதியுடன் மருத்துவமனையை தந்திரி மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி, தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். சன்னிதானத்தில் தேவசம்போர்டு நடத்தும் அன்னதானம் மற்றும் ஊழியர்களுக்கான மெஸ்ஸுக்கு காய்கறி வருவதில் இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காய்கறி மற்றும் பொருட்கள் தடையின்றி வந்து கொண்டிருப்பதாகவும் தேவசம்போர்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.