பார்க்க பார்க்க சலிக்காதே.. ஐயா உன் திருக்காட்சி; சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்.. தரிசன நேரம் அதிகரிப்பு
சபரிமலை : சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால், தரிசனத்திற்கு பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், பம்பையில் அடிக்கடி பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். தரிசனத்திற்காக வடக்கு வாசலில் கூட்டமாக நிற்கின்றனர். சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுவரை 2,00,000த்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல மகரவிளக்கு காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நாட்களில் படிபூஜை நடைபெறாது.