உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிகம் அதன் அதிசயத்தை உணர்ந்தவர்கள் சனாதனம் பற்றி தவறாக பேச மாட்டார்கள்

ஆன்மிகம் அதன் அதிசயத்தை உணர்ந்தவர்கள் சனாதனம் பற்றி தவறாக பேச மாட்டார்கள்

திருவண்ணாமலை; ‘‘ஆன்மிகம், அதன் அதிசயத்தை பற்றி முழுமையாக உணர்ந்திருந்தார்கள் என்றால், அவர்கள் சனாதனத்தை பற்றி பேசமாட்டார்கள்,’’ என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூறினார். திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆஸ்ரமத்தில், 105ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று, இரண்டாம் நாளாக நடந்தது. இதில், விஜயா ராமநாதன் பாடிய, ‘யோகிராம் சுரத்குமார் பாடல்கள்’ ஒலித்தட்டு மற்றும் புதுச்சேரி யோகி ராம் சுரத்குமார் சர்வதேச ஆன்மிக மையம் சார்பில் பக்தர்களால் இயற்றப்பட்ட, ‘துதி ஆரம்’ என்ற புத்தகத்தையும், தெலுங்கானா கவர்னர் தமிழிசை வெளியிட்டார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகத்தை பற்றியும், அதன் அதிசயத்தை பற்றியும், முழுமையாக உணர்ந்திருந்தார்கள் என்றால், அவர்கள் சனாதனத்தை பற்றி பேசமாட்டார்கள். என்னை பொறுத்தவரை அவர்கள் நாவில்தான் பேசுகின்றனர், உள்ளத்தில் இருக்கிறது.  அதனால்தான் அவர்களது குடும்பத்திலேயே சிலர் கடைப்பிடிக்கின்றனர். திருவண்ணாமலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது தவறு. பல எதிர்ப்புக்கு பிறகு திரும்ப பெற்றனர்.  எனக்கு எப்போதும் மக்கள் சேவை செய்வதில் விருப்பம் உண்டு. ஐந்து ஆண்டாக கவர்னராக சேவை செய்கிறேன். அடுத்து, 5 ஆண்டுக்கு என்ன செய்ய சொல்ல போகிறார் என்பது அருணாசலேஸ்வருக்குதான் தெரியும். எனக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அண்ணன், தங்கையாக புதுவை வளர்ச்சியடைய செய்வதில் ஒன்றாக இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !