உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிவிசுவநாதர் கோயிலில் 30ம் தேதி திருக்கல்யாண விழா துவக்கம்!

காசிவிசுவநாதர் கோயிலில் 30ம் தேதி திருக்கல்யாண விழா துவக்கம்!

தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 30ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 30ம் தேதி திருக்கல்யாண திருவிழா துவங்கி நவ.9ம் தேதி வரை நடக்கிறது. துவக்க விழா அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் உழவார பணிவிடை, ஆவாஹன பலிநாயகர் எழுந்தருளல், பூங்கோயில் வாகன உலா, பேராசிரியர் கணபதிராமனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நவ.7ம் தேதி காலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மாலையில் பல்லக்கில் அம்பாள் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நாளான 9ம் தேதி காலையில் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கிறார். இரவு அம்மன் சன்னதி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, உதவி கமிஷனர் கண்ணதாசன், கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !