அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளில் தல வரலாறு குறித்த ஒவியங்கள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற 2024ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக, கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சபா மண்டபத்தில் கோவிலின் தல வரலாற்று குறித்த கதை சொல்லும் ஓவியங்களும், மண்டபத்தின் மேல் பரப்பில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக ஹோம பூஜைகள் நடத்துவதற்கு யாகசாலைகள் அமைக்க அன்னதான கூட வளாகத்தில் உள்ள இடத்தில் தகர ஷெட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.