உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மேலி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்கள் தரிசனம்

நிம்மேலி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை; நிம்மேலி விஸ்வநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நிம்மேலி கிராமத்தில் விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் நாடி வருபவர்களுக்கு வாரி வழங்கும் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சனீஸ்வர பகவான் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்தத்தில் நீராடி விஸ்வநாத ஸ்வாமியை பூஜித்து நோய் நீங்கி நிம்மதி அடைந்ததால் இவ்வூர் நிம்மதியூர் என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் மருவி நிம்மேலி என்று ஆயிற்று. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் இன்று சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்றது சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து மாலை 5:20 மணிக்கு கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார் இதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் பரிகார ஹோமமும் மதியம் 2 மணிக்கு பூரணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து மூன்று மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது சரியாக 5:20 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  எள் தீபம் ஏற்றி, அன்னதானம் செய்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம், விருச்சகம், மகரம், மீனம் ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுபோல மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர் கோவில்  உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற  சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !