ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு தானமளித்த முஸ்லிம்: தூத்துக்குடியில் செப்பேடு கண்டெடுப்பு
சென்னை: துாத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் பூஜைக்கு, அசாது நாவாப்பு சாய்பு என்ற முஸ்லிம் தானமளித்த செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை சுவடி திட்டப் பணிக் குழுவினர், சமீபத்தில் துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் ஆய்வு செய்தனர். அங்கு, இரண்டு செப்பேடுகள் கிடைத்தன.
இதுகுறித்து, அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரைபாண்டியன் கூறியதாவது: துாத்துக்குடி ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில், இரண்டு செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவை இரண்டிலும், முஸ்லிம் ஒருவர், ஹிந்து கோவில் பூஜைக்காக நன்கொடை வழங்கிய தகவல்கள் உள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள ஆற்காட்டை தலைநகராகக் கொண்ட இஸ்லாமியர்களான நவாப்புகள், கர்நாடக பகுதிகளை, 1690 முதல் 1801 வரை ஆண்டனர். நவாப்புகளில் பலர் மத அடையாளங்களைக் கடந்த மனிதநேயர்களாக இருந்துள்ளனர். அவர்கள், அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் மதித்ததுடன், அரசின் சார்பில் வழிபாட்டு சடங்குகளுக்கு உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில், திருநெல்வேலி குறவர் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்திய அபிேஷகம், நைவேத்தியம் செய்ய லாலுகான் சாய்பு, தான அறக்கட்டளை நிறுவியதும், அசாது வால சாய்பு, இஸ்மாலி ராவுத்தர் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு நித்திய பூஜைக்காக தானமளித்த செய்திகள், ஏற்கனவே கிடைத்த செப்பேடுகள் வாயிலாக தெரியவந்தன. இந்நிலையில், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கிடைத்துள்ள செப்பு பட்டயங்கள், 1774ல் வெட்டப்பட்டுள்ளன. அதில், ராச மானியார் அசாது நவாப்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோவிலின் அருகில் உள்ள கிராம மக்கள், கோவில்களுக்கு தானம் அளித்துள்ளனர்.
அதாவது, ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் பூஜைக்கும், மாறமங்கலத்தில் உள்ள சந்திரசேகர சுவாமி கோவிலின் திருப்பணிக்கும் தானியங்களையும், நிலத்தையும் தானமளித்து, அதற்கான தர்மக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதாவது, அரசுக்கு சேர வேண்டிய வரியின் ஒரு பகுதியை, ஆட்சியாளரின் பெயரில், கோவிலுக்கு வழங்க, முஸ்லிம் ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. செப்பு பட்டயத்தில் நிலத்தின் அளவு, அதில் விளையும் தானியங்களின் அளவுக்கேற்ப கோவிலுக்கு வழங்க வேண்டிய தானியத்தின் அளவு, அவற்றை நிர்வகிப்போரின் பெயர்கள், அவர்களுக்கான பொறுப்புகள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளன. ஆனாலும், அக்கால அளவை முறைகள் தற்போது இல்லை. இந்த செப்பு பட்டயத்தில் சில ஊர்களைச் சேர்ந்தோர் சாட்சியாகவும் கையெழுத்திட்டுள்ளனர். இவை, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.