பிரமாண்ட பாறை.. குகைக்குள் கிருஷ்ணர் தரிசனம்
மன அமைதிக்காகவும், பிரச்னைகளை கடவுளிடம் முறையிடவும் நாம் கோவிலுக்கு செல்கிறோம். சில கோவில்களில் இருந்து, திரும்பி வரவே மனது இருக்காது.
அதிலும் மலைகளை குடைந்து குகைக்குள் இருக்கும் கோவில்களுக்குள் சென்று, சாமியை தரிசிக்க பக்தர்கள் அதிகம் விரும்புவர். இந்த வகையில் குகைக்குள் இருக்கும் கிருஷ்ணர் சிலை பற்றி பார்க்கலாம். பெங்களூரு பசவனகுடி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது, அங்கு உள்ள நந்தி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் கடலைக்காய் திருவிழா பிரசித்தி பெற்றது. பசவனகுடியில் நந்தி கோவில் மட்டுமே உள்ளது என்று பக்தர்கள் நினைத்து விட வேண்டாம். குகைக்குள் கிருஷ்ணர் கோவிலும் உள்ளது. அதுவும் நந்தி கோவிலில் இருந்து நடந்து செல்லும் துாரத்தில் தான்.
பிரமாண்ட பாறை; நந்தி கோவிலில் இருந்து இடதுபக்கம் 200 மீட்டர் நடந்து சென்றால், பிரமாண்ட பாறை தெரியும். அதற்குள் சென்றால் குகை மாதிரி வழி செல்லும். அந்த வழியில் சென்று பார்த்தால், கோவர்த்தன மலையை கிருஷ்ணர் சுண்டு விரலில் துாக்கி வருவது போன்ற கிருஷ்ணர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றி, பக்தர்கள் தியானம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர். சிறுவயதில் கிருஷ்ணர் செய்த லீலைகள் பற்றியும், சிற்பங்கள் வைத்துள்ளனர். இதுதவிர, மாணவர்கள் படிப்பதற்கு குருகுலமும் உள்ளது. ஆனால் அங்கு செல்ல, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையை குடைந்து இந்த கோவிலை உருவாக்கி இருக்கலாம் என்று பக்தர்கள் நினைக்கலாம். ஆனால், பாறை மாதிரியில் இந்த கோவிலை வடிவமைத்து உள்ளனர்.
குழந்தைகள் விருப்பம்; இந்த கோவிலில் குழந்தைகள் நிச்சயம் விரும்பும் கோவிலாக இருக்கும். காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். கோவிலுக்கு எதிரே வாகன நிறுத்தும் வசதியும் உள்ளது. கோவர்த்தனா கோவில் என்ற பெயரில் இருக்கும் இந்த கோவில், உடுப்பி ஸ்ரீபுத்தகே வைணவ மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது - நமது நிருபர் -.