நூறு சாமிகள் இருந்தாலும்.. கோயிலுக்கு பாதயாத்திரையாக கால்கள் செயலிழந்த தாயை தூக்கி சென்ற மகன்
தேவதானப்பட்டி; மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாற்று திறனாளியான தாயார் அமராவதியை கையில் சுமந்தபடி தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு கைகளில் சுமந்தபடி தூக்கிச் செல்லும் மகனின் பாசச் செயல் சொர்க்கவாசல் காண்பதற்கு நிகரானது.
"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா" என்ற சாகாவரம் பெற்ற பாடலை கேட்கும்போது அனைவரது மனமும் இனம்புரியாத அன்பில் கண்ணோரம் நீர்த்துளி கனக்கிறது. தாயின் அருமையை உணராதவர்கள் யாரும் இல்லை, இதனை உணராதவர்கள் மனிதரில்லை. தாயின் அன்பை உணர்ந்த அவர்களின் வரிசையில், பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாண்டியராஜன் 36. இவரது தாயார் அமராவதி 50. இரு கால்களும் செயலிழந்து மாற்றுத்திறனாளியானார். தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மார்கழி மாதம் முதல் வெள்ளிக்களிக்கிழமை தனது ஊரிலிருந்து தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு 10 கி.மீ., தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். உடன் நான்காவது படிக்கும் தனது மகள் வளர்மதியை 9. அழைத்துச் சென்றார்.
பாண்டியராஜன் கூறுகையில்: எனது தாய் எனது உலகம், பாசத்தோடு எனது தாயாரை தூக்கும் போது எடை தெரிவதில்லை. மாறாக எனது தாயார் கூலி வேலை செய்து என்னை வளர்த்த காட்சிகள் தெரிகிறது. இதனால் எனது தாயார் பாரமில்லை. தூக்கிச் செல்லும்போது ஆங்காங்கே எனது தாயாரை தாங்கிபிடித்து, தண்ணீர் கொடுத்து, 10 நிமிடம் இடைவெளிவிட்டு மீண்டும் தூக்கி செல்வேன். எனது தாயார் உடல் நலம் சீராக வேண்டும் என காமாட்சியம்மனை வணங்குவதற்காக பாதயாத்திரையாக செல்கிறேன் என்றார்.