சீர்காழி மகா மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு
மயிலாடுதுறை; சீர்காழி மகா மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் சாலைகரையாள் என்கிற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், ஐயப்பன், முனீஸ்வரர், காத்தவராயன் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். கோவிலுக்கு தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கோவில் நடை திறந்தபோது அங்கு இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள விநாயகர் கருங்கல் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டதுடன், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விநாயகர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.