உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை; இல்லற வாழ்வில், ‘ஊடலுக்கு பின், கூடல்’ என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர்  கோவிலில்  நேற்று, ‘திருவூடல்’ விழா  நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சிவ பக்தரான பிருங்கி மகிரிஷி முனிவர், அருணாசலேஸ்வரரை காண, கிரிவலபாதையில் தவமிருந்தார். அவருக்கு காட்சியளிக்க அருணாசலேஸ்வரர் சென்றார். அப்போது, பராசக்தி அம்மன், தன்னை வணங்காத, பிருங்கி மகிரிஷிக்கு காட்சியளிக்க செல்லக்கூடாதென தடுக்க,   அதை மீறி அருணாசலேஸ்வரர் செல்ல, இதில், இருவருக்கும் ஏற்படும் ஊடலை விளக்கும் விழாவாக ‘திருவூடல்’ விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்றிரவு, 7:00 மணியளவில், மாடவீதியில் ஒன்றான திருவூடல் தெருவில், சுவாமிகள் இருவருக்கும் இடையே நடக்கும் ஊடலை, சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானம் செய்ய முயன்று, தோல்வியில் முடிந்து, அருணாசலேஸ்வரர்,  பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க செல்லும் வைபவமும், செல்லும் வழியில் குமரக்கோவிலில் இரவு தங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.  இதை தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், இன்று, 17 ல் கிரிவலம் சென்று, பிருங்கி மகிரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், செல்லும் வழியில், அருணாசலேஸ்வரர், கொள்ளையர்களிடம் நகையை  பறிகொடுத்து, கோவிலிற்கு திரும்பும் நிகழ்வும், பின்னர், உண்ணாமுலையம்மனுக்கும், அருணாசலேஸ்வரருக்கும், ‘மறு ஊடல்’ நடக்கும் நிகழ்வும் நடக்கும். இந்த நிகழ்வை காணும் தம்பதியினரிடையே, ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !