1000 வயதை தாண்டிய அழகர்கோவில் கதவு; பிரமிக்க வைக்கும் நுண்ணிய மரச்சிற்பங்கள்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர்கோயில் மூலவர் சன்னதிக்கு செல்லும் தொண்டமான் கோபுர நுழைவு வாயில் கதவு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோயில் துணைக்கமிஷனர் ராமசாமி கூறியதாவது: கள்ளழகர் கோயிலில் ஏராளமான கற்சிற்பங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுபோல தொண்டமான் கோபுர நுழைவு கதவு மற்றும் நிலைகள் மரச்சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து 1940ல் ராதாகிருஷ்ணா, "திருமாலிருஞ்சோலை மலை" என்னும் ஆங்கில நுாலில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைக்கதவு 18 அடி உயரம், 9 அடி அகலம் உள்ளது. 200 க்கும் மேற்பட்ட நுண்ணிய மரச்சிற்பங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்களில் சிவபெருமானின் மாறுபட்ட தோற்றங்கள், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள், கண்ணனின் லீலைகள், மகாபாரத கதைகள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் தத்துவங்கள் என பலவித காட்சிகளை சிறுகுறைகூட இல்லாமல் மிகவும் துல்லியமாக செதுக்கியுள்ளனர். இது அக்கால மரச்சிற்பக் கலைஞர்களின் திறனை வெளிக்காட்டுவதாக உள்ளது. தொல்லியல் ஆய்வு மாணவர்கள் கோயில் ஸ்பதிகள் இதைப் பார்த்து ஒப்பில்லா மரச்சிற்ப வேலைகள் என கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இக்கதவுகளுக்கு எந்த வேலைப்பாடும் செய்யப்படவில்லை. சுத்தம் செய்து பாதுகாப்பாக பராமரித்து வருகிறோம், என்றார்.