உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆதீனத்திற்கு வாழ்த்து தெரிவித்த முஸ்லீம்கள்

கம்பகரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆதீனத்திற்கு வாழ்த்து தெரிவித்த முஸ்லீம்கள்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வரர் கோவில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. கோவிலில் நாளை (2ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கி,  எட்டு கால யாக பூஜைகளுடன்  கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.

இந்நிலையில், கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, திருபுவனம் இஸ்லாமிய ஜமாத்தார்கள் சார்பில் பள்ளிவாசல் தலைவர் தாஜ்தீன் தலைமையிலான  நிர்வாகிகள், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து, தாம்பூலத்தில்  பழங்கள், மலர், வெற்றிலை, பாக்குகளை வைத்து, சீர்வரிசையாக  எடுத்துச் சென்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்திட வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, ஆதீனம் அவர்களை வரவேற்று,  இஸ்லாமியர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். இது குறித்து ஜமாத்தார்கள் கூறியதாவது;  மத நல்லிணக்கத்துடன் எங்கள் பகுதிகளில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். கோவில் திருவிழாக்களின் போதும் அவர்கள் எங்களை அழைப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !