ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் யானை சிலைகள் கொடி மரங்கள் மாயம்; விசாரணை துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கொடி மரங்கள், யானை சிலைகள் மாயமானது குறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணையை துவக்கினர். கோவிலில், முன்பு பணிபுரிந்த செயல் அலுவலர்கள், பட்டர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
செப்பு தகடுகள்; தற்போதைய கோவில் செயல் அலுவலர் முத்துராஜா ஜன., 29ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இரு புகார்கள் கொடுத்தார். முதல் புகாரில், கோவில் கல்யாண மண்டப மணமேடை படிகளின் இருபுறமும் இருந்த இரு கல் யானை சிலைகள், 2008, 2009ல் சட்டவிரோதமாக அகற்றப்பட்டது. சிலைகள் யாரால் அகற்றப்பட்டது. தற்போது அதன் நிலை குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.
இரண்டாவது புகாரில் கூறியிருப்பதாவது: ஆண்டாள், வடபத்ர சயனர், பெரியாழ்வார் சன்னிதிகளில் இருந்த கொடி மரங்கள் 2015, 2016ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு, புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பழைய மூன்று கொடி மரங்களில் ஒன்று தற்போது கோவில் வசமுள்ள நிலையில் மீதமுள்ள இரு கொடி மரங்களும் கோவிலில் இருந்து சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கொடி மரங்களில் பழமையான செப்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரித்ததில், கோவிலில் வெள்ளை அடிக்கும் டெண்டர்தாரர் கோமதிநாயகம், 2 கொடி மரங்களையும் திருக்கோவிலில் பிரசாத கடை ஏலம் எடுத்து நடத்தி வரும் ராமர், அவர் சகோதரர் மாரிமுத்து மற்றும் சில நபர்கள் லாரியில் ஏற்றிச்சென்றனர் என, தெரிவித்துள்ளார். எனவே, ராமரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
விசாரணை; இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீசார் இரு நாட்களுக்கு முன் விசாரித்தனர். நேற்று டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், தனிப்படை போலீசார் விசாரணை நடத்த கோவிலுக்கு வந்தனர். அலுவலகத்தில் செயல் அலுவலர், ஊழியர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர். இதற்கிடையே, 2008 முதல் தற்போது வரை கோவிலில் பணிபுரிந்த செயல் அலுவலர்கள், பட்டர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், தற்போதைய ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.