பத்ரகாளியம்மன் கோவிலில் குளிகை நேரத்தில் பிரார்த்தனை செய்த இ.பி.எஸ்
மேட்டூர்; தலைமை பதவியில் நீடிக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபட்டார்.சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, 2013 ஜன., 23ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த, இ.பி.எஸ்., முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது முதல், அடிக்கடி இக்கோவிலுக்கு இ.பி.எஸ்., வந்து செல்கிறார். அமைச்சர் பதவியை தொடர்ந்து முதல்வர், அ.தி.மு.க., பொதுச்செயலர் என முக்கிய பதவிகளை கைப்பற்றினார். இந்நிலையில் இன்று காலை, 10:45 மணிக்கு அக்கோவிலுக்கு வந்தார். அறநிலையத்துறை செயல் அலுவலர் திருஞான சம்பந்தர், அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின் பத்ரகாளியம்மனை வழிபட்ட இ.பி.எஸ்., பிரகாரத்தை சுற்றி வந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உற்சவரை அமர வைக்கும் ஊஞ்சல் முன் கைகளை கட்டி சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்து விட்டு, 11:45க்கு புறப்பட்டார். இதில், மேச்சேரி பேரூர் செயலர் குமார், கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், செல்வம், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலைரசன், வக்கீல் அணி செயலர் சித்தன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்றனர்.குளிகை நேரத்தில் பிரார்த்தனை; இன்று சுக்ரனுக்கு உரிய பூராட நட்சத்திரம் காலை, 11:00 முதல், 12:00 மணி வரை. இந்த ஒரு மணி நேரம் தலைமை பதவியில் நீடிக்க விரும்புவோர் வழிபாடு செய்யும் சூரிய ஓரை. பஞ்சபட்சி சாஸ்திரப்படி காலை, 10:40 முதல் மதியம், 1:15 வரை பட்சிகளில் வல்லுாறு பட்சி அரசு செய்யும் நேரம். இ.பி.எஸ்., நாள், நட்சத்திரம், ஓரை, பஞ்சபட்சி என அனைத்து நல்ல நேரத்தை கணக்கிட்டு கோவிலில் வழிபட்டுள்ளார். அவர் வழிபாடு முடிந்து கோவில் அலுவலகத்தில் அமர்ந்தார். அப்போது, கொங்கணாபுரம் தம்பதியர், அவர்களது, 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க கேட்டுக்கொண்டனர். அவர், ‘விசாகன்’ என பெயர் சூட்டினார்.