பெரியகோவிலில்
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் சதய விழாவில், "மாமன்னன் ராஜராஜன் விருதுகளை, மூத்த வரலாற்றாய்வாளர் பாலசுப்பிரமணியன், ஆன்மீக தொண்டர் பெரியவர் சோமு ஆறுமுகம் ஆகியோருக்கு கலெக்டர் பாஸ்கரன் வழங்கி, கவுரவித்தார்.தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழன், 1,027வது சதயவிழா கடந்த, 24,25ம் தேதிகளில், இரண்டு நாட்கள் விமர்சையாக நடந்தது. வழக்கமாக இதன் நிறைவுநாள் நிகழ்ச்சியில் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மாமன்னன் ராஜராஜன் விருதுகளுக்கு, இம்முறை குடவாயில் பாலசுப்பிரமணியன், ஆன்மிக பெரியவர் சோமுஆறுமுகம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.மாமன்னன் ராஜராஜன் விருதுக்கு ஆண்டுதோறும் பெயர்களை அறிவிக்கும்போது, அரசியல் சூழலால், தகுதியே இல்லாதவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால் இம்முறை தான், தகுதியானவர்களை அரசியல் தலையீடின்றி தேர்ந்தெடுத்து சதய விழா குழுவினர் வழங்கியுள்ளனர் என, தஞ்சை ஆய்வாளர்கள், ஆன்மீகவாதிகள், அரசியல் பிரமுகர்கள் இடையே பாராட்டு எழுந்துள்ளது.குடவாயில் பாலசுப்பிரமணியன், 65. மூத்த வரலாற்றாய்வாளர். இவர் திருவாரூர் மாவட்டம், குடவாயில் தாலுக்கா நகரப்பகுதியை சேர்ந்தவர். சரஸ்வதி மஹால் நூலகத்தில் வெளியீட்டு மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நூலகத்தில் கடந்த, 26 ஆண்டுகளாக பணியாற்றியவர். கடந்த, 43 ஆண்டுகளாக வரலாற்று ஆய்வு பணியை மேற்கொண்டு, பல்வேறு புதிய கல்வெட்டு, சிலைகளை கண்டறிந்து அதன் சிறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.கோவில் கட்டிடக்கலை, சிற்பம், ஆகமம், இசை, நாட்டியம், கல்வெட்டியல் பல துறை சார்ந்து, பலஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இதுவரை, திருவாரூர் திருக்கோயில், தஞ்சாவூர், ராஜராஜச்சுரம், நந்திபுரம், கபிலக்கல், தஞ்சை நாயக்கர் வரலாறு உள்பட, 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு, வரலாற்றுக்கு அரிய பங்களிப்பை செய்துவரும் மூத்த வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு, மாமன்னன் ராஜராஜன் விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல தஞ்சை பெரியகோவில் வாரவழிபாட்டு மன்றத்தலைவர் சோமு ஆறுமுகம். இவர், கடந்த 30, 40 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் பாராது, கோவிலில் ஆன்மீக தொண்டாற்றி, பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவருடைய இப்பணியை சிறப்பிக்கும் வகையில் மாமன்னன் ராஜராஜன் விருது அறிவிக்கப்பட்டது. தஞ்சை பெரியகோவில் சதய விழாவில், அரசியல் தலையீடு இன்றி, ராஜராஜன் விருதுகளை தகுதியான இருவருக்கு வழங்கியதால், வழக்கமாக நிலவும் "விருது சர்ச்சை ஏதுமின்றி, நடப்பாண்டு சதய விழா "மிக அமைதியாக நிறைவடைந்தது.தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பெரிய நாயகி சமேத பெருடையார் செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ராஜராஜ சோழனின் செப்பு திருமேனிக்கு வைர கிரிடம் சூட்டப்பட்டு புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா சென்ற காட்சி.