கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கோவை; கோவை கோனியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
கோவை கோனியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 12ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 13ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது. தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, கொடிக்கட்டு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு, யாகசாலை பூஜை மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், இரவு, 7:55 மணிக்கு, வெள்ளை துணியில், சிம்ம வாகனம் மற்றும் சூலாயுதம் வரையப்பட்ட கொடி, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் உள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்கம்பத்தில் அக்னிச்சாட்டு நடந்தது. தொடர்ந்து, விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 27ம் தேதி, திருக்கல்யாணமும், 28ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டமும் நடக்கிறது.