உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி; ஏன் இத்தனை சிறப்புகள்..! சிவன் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?

மகா சிவராத்திரி; ஏன் இத்தனை சிறப்புகள்..! சிவன் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?

மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி  ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள்.  சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து  வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.

சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.  முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம்  செய்ய வேண்டும்.

சிவராத்திரியின் சிறப்புகள்: மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே  வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி  மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி  சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம்  வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட  நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில்  ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில்  வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி  என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும்  இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை  சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை  த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன்  அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !