திருப்புவனத்தில் பூச்செரிதல் விழா; பெண்கள் பூக்கூடை சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்
திருப்புவனம்; திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பூக்கூடைகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர். திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பாதம், கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். நேற்று திருப்புவனம் புதூர், கொடிக்கால் தெரு, பழையூர், தேரடி வீதி, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பாரம்பரிய முறைப்படி ஓலை கொட்டானில் மல்லிகை, கனகாம்பரம், மரிகொழுந்து, தாமரை, அல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை சுமந்து ஊர்வலமாக நகர் முழுவதும் வலம் வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். சாரை சாரையாக பெண்கள் கூட்டம் ஊர்வலமாக வந்த நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக திருவிழாவின் போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டு ஈடுபடுத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை.இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் போலீசார் இல்லாததது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்றும், நாளையும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வர உள்ள நிலையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், போக்குவரத்தை சரி செய்யவும், கோயில் உள்ளேயும் கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.