திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலும் ஒன்று, இங்கு பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும், தினசரி பல்வேறு மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம், இந்தாண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு அம்மனும் சுவாமியும் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின் காலை 10:10 மணிக்கு கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர் நடத்தி வைத்தார். கொடியேற்ற வைபவத்தில் மானாமதுரை டி.எஸ். பி., கண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 20ம் தேதி ஆறாம் நாள் திருவிழா மடப்புரத்திலும், 22ம் தேதி வெள்ளிகிழமை காலை ஒன்பது மணிக்கு திருக்கல்யாணமும், 23ம் தேதி சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.