பங்குனி திருவிழா; தங்க பல்லக்கில் திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி அருள்பாலித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 28ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. திருவிழா நடைபெறும் மார்ச் 30வரை காலையில் தங்க சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். அதன்படி பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 21 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சியும், மார்ச் 22ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 23 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, மார்ச் 24ல் பங்குனி உத்திர விழா, மார்ச் 26ல் சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடக்கிறது, ஏப். 27 மதியம் பச்சைக்குதிரை ஓட்டம், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 28ல் திருக்கல்யாணம், மார்ச் 29ல் தேரோட்டம், மார்ச் 30ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.