பாலமேடு கோயிலில் பங்குனி உற்ஸவ விழா
ADDED :558 days ago
பாலமேடு; பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு தனித்து பாத்தியப்பட்ட செல்லத்தம்மன், காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் நகைப்பெட்டி எடுத்து கோயில் வந்து செல்லத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அன்றிரவு காளியம்மனுக்கு கரகம் ஜோடித்து கோயில் வந்து வழிபட்டனர். பொங்கல் பானை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொது மகாசபை கட்டடத்தில் இருந்து பழபெட்டி ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு பழ அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெற்றது. ஏற்பாடுகளை வடக்கு தெரு பொது மகாசபை சங்கத்தினர் செய்திருந்தனர்.