உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏப்.18 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்று நாள் முழுவதும் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு பெருமாள் கோடாரி கொண்டை இட்டு, தங்க நெல் மணி தோரணங்கள் சூடி, வில், வாள், கத்தி, கேடயம், குத்துவாள், வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 1:00 மணிக்கு மல்லிகை, கனகாம்பரம் என விதவிதமான பூக்கள் கட்டிய பல்லக்கில் அமர்ந்தார். மேலும் 1:30 மணிக்கு தன் ஆஸ்தானத்தை விட்டு வெளியேறிய அழகர் கருப்பணசாமி இடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களின் இடைவிடாத கோவிந்தா கோஷம் முழங்க 3:30 மணிக்கு அழகர் அரக்கு பட்டு உடுத்தி, வெள்ளி கிண்ணத்தில் அவள் பாயாசம் சாப்பிட்டபடி இறங்கினார். இதனால் விவசாயம் நன்கு செழித்து ஊர் மக்கள் நல்ல சுபிச்சத்துடன் இருப்பார்கள் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். பின்னர் பல்வேறு மண்டக படிகளில் சேவை சாதித்தபடி அழகர் தல்லாகுளம் மண்டகப்படியை அடைந்தார். பின்னர் காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகிய அழகரை தல்லாகுளத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் துருத்தி என்னும் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !