உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்பட்டுடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கினார் அழகர் : பக்தர்கள் பரவசம்

வெண்பட்டுடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கினார் அழகர் : பக்தர்கள் பரவசம்

உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோக நரசிங்கபெருமாள் கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெண்பட்டுடுத்தி முல்லைப்பெரியாற்றில் பெருமாள் இறங்கினார்.மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்கது . லட்சக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள் அதேபோல் உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் கோயிலில் நேற்று காலை பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது , முன்னதாக கடந்தாண்டை போலவே 3 முறை என்ன பட்டு உடுத்துவது என்று பூ போட்டு பார்த்தனர். மூன்று முறையும் வெண் பட்டு என்று வந்தது. எனவே பெருமாளுக்கு வெண் பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாறு நோக்கி கிளம்பினார். வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாற்றுக்கு சென்றார். 20 க்கு மேற்பட்ட இடங்களில் அனைத்து சமூகத்தினரும் மண்டகப்படி நடத்தினர். லட்டு, சுண்டல், பொங்கல், புளியோதரை, அவல் என பல்வேறு பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு கிளம்பியவர் சரியாக 10,மணிக்கு ஞானம்மன் கோயில் படித்துறையில் முல்லைப்பெரியாற்றில் இறங்கினார். முன்னதாக காளாத்தீஸ்வரர் கோயில் சார்பாக பெருமாளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். நாயுடு மகாஜன சங்கம் இன்றைக்கு உபயதாரராக இருந்தது. ஏற்பாடுகளை ஓம் நமோ நாராயணா பக்த சபை நிர்வாகிகள் செய்திருந்தனர், பக்த சபை சார்பாக பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அர்ச்சகர் ரெங்கராஜன் அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !