உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாள் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு மற்றும் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் நடந்த திருப்பணி காரணமாக, மூன்று ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில், 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்.,26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தையொட்டி, நேற்று, காலை 7:15 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கருடாழ்வார் படத்துடன்கூடிய கொடி ஏற்றப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர், ஆதிகேசவப் பெருமாள் வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தினமும், காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். அதன்படி மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகனமும், 29ல் காலை தேரோட்டமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் பூவழகி, தீர்த்தகாரர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !