கோட்டை தர்ம முனிஸ்வரர் கோயில் பூக்குழி விழா
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில், விழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன், துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக, நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முக்கிய விழாவான பூக்குழி விழா இன்று நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம், கூட்டம்புளி பகுதிகளில் இருந்து, காவடி, பால்குடம், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், கோயிலுக்கு ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால்குடம் மூலம் மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், சாத்தமங்கலம், கூட்டாம்புளி, கொட்டுப்புளி, வரவணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.