ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1007வது அவதார உற்சவ தேரோட்டம் கோலாகலம்
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1007வது அவதார உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார். இத்தகைய சிறப்பு மிக்க ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், மணவாள மாமுனிகள் கோவில் ஆகிய சன்னிதிகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவத்தின் 7வது நாள், ஆதிகேசவப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வருவார்.
இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம், மே 3ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே 11ல்) நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ராமானுஜரை தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்தனர். விழாவில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.