ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்
ஆழ்வார்திருநகரி; ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் 13ம் தேதி மாலை திருமுளைச்சாற்று கூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து விழா ஆரம்பமாயிற்று. அதன் பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் துவஜாரோஹணம் நடந்தது.
இதையொட்டி காலையில் கும்ப பூஜை நடந்தது. பின்னர் நகர் வலம் வந்த கொடிப்பட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இன்று முதல் 4ம் திருவிழா வரை சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீசி உலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி 5ம் திருநாளன்று காலையில் நவதிருப்பதி எம் பெருமான்கள் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளி பூ பந்தலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடக்கிறது. இரவில் நவதிருப்பதி பெருமான்கள் 9 கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் தங்க அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபரங்கி நார்காலியிலும் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி 9ம் திருநாளன்று காலை சுவாமி நம்மாழ்வார் திருத்தேருக்கு எழுந்தருளி திருத்தேர் திருவிழா நடக்கிறது.