காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம்
ADDED :539 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோற்சவம், கடந்த 12ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் ஆதிசங்கரர் விக்ரஹம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காமாட்சி அம்மன் மூலவர் சன்னிதி முன்பாக எழுந்தருளச் செய்து, ஆதிசங்கரர் இயற்றிய சவுந்தர்யலஹரி பாடல் பாடப்பட்டது. காமாட்சியம்மனுக்கும், ஆதிசங்கரருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஆதிசங்கரர் விக்ரஹம் கோவில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னிதிக்கு எழுந்தருளச் செய்து, அங்கு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து காமாட்சியம்மனும், ஆதிசங்கரரும் தனித்தனியாக கேடயத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதை தொடர்ந்து, கோவில் சுக்ரவார மண்டபத்தில் ஆதிசங்கரருக்கு மஹா தீபாராதனை நடந்தது.