உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவம், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை மங்களகிரி விமான புறப்பாடு நடந்தது. இரவு, வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான, வைகாசி விசாகமான இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியறை பூஜைகள், பின்னர், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, காப்பு களைதல் நிகழ்வு நடந்தது. காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலாவை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. காலை 11:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கல்யாண விருந்து; திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், 750 பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் இரவு கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

மொய் எழுதலாம் வாங்க; முருகப்பெருமானுக்கு, திருக்கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதும் வைபவம் நடக்கிறது. இதில், பக்தர்கள் 50, 100 ரூபாய் அதற்கு மேலும் மொய் எழுதலாம்.மொய் எழுதுவோருக்கு, திருமணத்தில் தாம்பூலப்பை தருவதுபோல சுவாமியின் பிரசாதமான மஞ்சள், குஞ்குமம், திருமாங்கல்யசரடு, வளையல் மற்றும் இனிப்பு ஆகியவை அடங்கிய மஞ்சள் பை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. சுவாமிக்கு,ஆன்-லைன் வாயிலாகவும் மொய் எழுதலாம். அதற்கு,

https://vadapalaniandavar.hrce.tn.gov.in/ticketing/service_collectionindex.php?tid=6&scode=21&sscode=1&target_type=1&group_id=4 என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !