அரசூர் பெரிய விநாயகர் கோவிலுக்குள் புகும் மழைநீர்; பக்தர்கள் வேதனை
சூலுார்; அரசூர் பெரிய விநாயகர் கோவிலுக்குள் மழை நீர் புகுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சூலுார் அடுத்த மேற்கு அரசூரில், 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெரிய விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு கிழக்கு புறம் பள்ளம் செல்கிறது. பரமசிவன் கோவில் அருகில் உள்ள குட்டை நிறைந்தால், இந்த பள்ளத்தின் வழியே மழைநீர் செல்லும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரசூர் பகுதியில் பெய்த மழையால் குட்டைகள் நிறைந்து வழிந்தன. பரமசிவன் கோவில் அருகே உள்ள குட்டையில் இருந்து வெளியேறிய மழைநீரால் பள்ளம் நிரம்பி அருகில் உள்ள பெரிய விநாயகர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், சேறும், சகதியுமாக கோவில் மாறியதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 100 ஆண்டுகள் பழமையான கோவிலுக்குள் மழை நீர் புகுவது வேதனை அளிக்கிறது. மழைநீரில் விஷ ஜந்துக்கள் வருகின்றன. திருப்பணிகள் செய்ய முடிவு செய்துள்ளோம். மழைநீர் புகாதவாறு கோவிலை உயர்த்தி கட்ட திட்டமிட்டுள்ளோம். கோவிலை புதிதாகவும், உயரமாகவும் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளிக்க வேண்டும், என்றனர்.