உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை நாளை மாலை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை நாளை மாலை திறப்பு

நாகர்கோவில்; ஆனி மாத பூஜை களுக்காக சபரிமலை நடையில் நாளை மாலை திறக்கிறது 10 வயதுடைய சிறுமியை சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19 வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன்னை சபரிமலை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென்று திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தார் ஆனால் இதை தேவசம்போர்டு நிராகரித்திருந்தது. இதை தொடர்ந்து அந்த சிறுமியின் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது: எனக்கு 10 வயது ஆகிறது. இதுவரை மாதவிலக்கு தொடங்கவில்லை. 10 வயது ஆவதற்கு முன்பே என்னை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல என்னுடைய தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாலும், கொரோனா பரவல் மற்றும் பணம் நெருக்கடி காரணமாகவும் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அனைத்து கட்டுப்பாடுகளையும் மதித்து சபரிமலை தரிசனம் செய்ய தயாராக இருக்கிறேன். எனவே பத்து வயது என்ற நிபந்தனையை தளர்த்தி எனக்கு தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஹரிசங்கர் வி மேனன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்யக்கூடாது என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !