உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடியும் நிலையில் நாகாத்தம்மன் கோவில்; கண்டுகொள்ளாத ஹிந்து அறநிலையத்துறை

இடியும் நிலையில் நாகாத்தம்மன் கோவில்; கண்டுகொள்ளாத ஹிந்து அறநிலையத்துறை

சாலிகிராமம்; சாலிகிராமம் தசரதபுரம், மதியழகன் நகரில், நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. தனியார் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோவில், 2005 முதல் ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, கன்னேரி ஏரிக்கரையில் ஊர் காவல் தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1984ம் ஆண்டு, ஊர்மக்கள் சேர்ந்து அம்மனுக்கு கோவில் கட்டினர்.

இந்த கோவிலில் கடந்த 2000ம் ஆண்டு, கும்பாபிேஷகம் நடந்தது. அதன் பின், 23 ஆண்டுகளாக கும்பாபிேஷகம் நடக்கவில்லை. தற்போது இந்த கோவில், பராமரிப்பின்றி சிதிலடைந்து உள்ளது. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து, அபாயகரமான நிலையில் உள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் இரும்புக் கம்பியால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நித்திய பூஜைகள் செய்ய, அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உள்ளது. எனவே, இந்த கோவிலை விரைந்து சீரமைத்து கும்பாபிேஷகம் நடத்த, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: இக்கோவில், 60 ஆண்டு காலமாக உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, 1.50 ஏக்கர் நிலம், மதியழகன் நகரில் உள்ளது. இதில், கோவில் மண்டபம் அமைந்துள்ள இடம் போக, மீதியுள்ள இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக பக்தர்கள் வழங்கிய 100 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த புடவைகள், கோவில் தனியார் வசம் இருந்த போது நிர்வாகம் செய்த குடும்பத்திடம் உள்ளது. அவற்றையும் மீட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !