பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தமிழக கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரிய மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சாலைகள் வழியாகச் செல்கின்றனர். பல இடங்களில் சாலைகளின் நடுவில் தடுப்பு இல்லை. வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் கண்கள் கூசும் அளவிற்கு அதிகம் உள்ளது. பாதயாத்திரை செல்வோர் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர், பட்டையை பயன்படுத்துவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது. பாதயாத்திரை செல்வோர் விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். சாலையின் வலதுபுறமாக செல்ல வேண்டும் என போலீசார் அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் சாலையின் இடதுபுறமாக செல்கின்றனர். வலதுபுறம் நடந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.
ஒளிரும் ஸ்டிக்கர்களை பக்தர்களின் உடமைகளில் ஒட்ட வேண்டும். கை மற்றும் தோள்பட்டையில் ஒளிரும் பட்டை அணிய வலியுறுத்த வேண்டும். பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கும் போது சாலையின் வலதுபுறம் அமைக்க வேண்டும். அதில் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வண்ணம் பூச நடவடிக்கை கோரி அறநிலையத்துறை கமிஷனர், தமிழக சாலை திட்ட இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.